பிரசன்ன ஆலயம் - மணிநகர்

CSI தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம்

வெள்ளி விழா மலர்

பிரசன்ன ஆலயம் - மணிநகர் (1968 - 1993)

"கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" (சங் 138:8)

வாழ்த்துரைகள்

THE CHURCH OF SOUTH INDIA
TIRUNELVELI DIOCESE
The Rt. Rev. Jason S Dharmaraj
Bishop in Tirunelveli & Deputy Moderator

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

நாசரேத் சேகரம் மணிநகர் சபையினர் தங்களது ஆலயத்தின் வெள்ளி விழாவை 6-1-1994 அன்று கொண்டாடுவதை அறிந்து உளம் பூரிக்கிறேன். இதுகாறும் கடவுள் சபை மக்களின் வாழ்வில் பாராட்டியிருக்கின்ற எண்ணிலடங்கா நன்மைகளுக்காக அவருக்கு துதி செலுத்துகிறேன்.

கடவுள் தம்மை எல்லா ஜனங்களுக்கும் கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தின உண்மையை நிலைநாட்டவே பிரசன்ன ஆலயமென இவ்வாலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்து மானிட உருவில் தோன்றினதினாலே, கடவுளின் பிரசன்னத்தை உலகிலே வெளிப்படுத்தி, ஐக்கியத்தையும் ஏற்படுத்தினார். தூய பவுலடியார் எபேசியர் 3:11 இல் கூறுகிறார் "இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று வெளிப்பட்டது". "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" மத் 2:10.

பிரசன்னத் திருநாளில் ஐக்கியமும் மகிழ்ச்சியுமே வெளிப்பட்டது. இந்நன் நாளில் நமது ஐக்கியம் இன்னும் வலுப்படவும் அதனடிப்படையில் கிறிஸ்து உலகிற்கு அறிவிக்கப்படுவதையுமே இலக்காக கொண்டு செயல்பட அர்ப்பணியுங்கள். இவ்வாலயத்தின் கோபுரம் கட்டப்பட்டு இன்று பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக நான் கடவுளை துதிக்கிறேன். கோபுரம் கடவுளின் மகிமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த கிருபையையும் கடவுள் உங்களுக்கு அருளிச்செய்வாராக. இதற்காக உழைத்த கொடுத்த எல்லா மக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

கர்த்தர் தாமே தமது பரிசுத்த வீட்டின் நன்மையாலே திருப்தியடையச் செய்வாராக.

- ஜேசன் S தர்மராஜ்
பேராயர்

The Rt. Rev. S. Daniel Abraham B.D., S.T.M.,
(BISHOP IN TIRUNELVELI - RETIRED)

Rev. and Dear brother,

மணிநகர் சபை தனது ஆலயத்தின் 25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் இந்த சிறப்பு நாட்களில் இந்த சபையைக் கட்டி எழுப்பின இதில் உழைத்த ஊழியர் யாவரையும் நினைத்து அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன். சபையார் இந்த விழாவில் தங்களை திரும்பவும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து பிரசன்ன ஆலயத்தில் கர்த்தரை வழிபடுகிற சபையாராக தங்கள் அன்றாட வாழ்க்கையில் இரட்சகர் இயேசுவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் கிருபை செய்வாராக. ஆலய பிரதிஷ்டை ஆண்டு விழா ஆண்டவருக்கு மகிமையாகவும் அவர் செயலாற்றலுக்கு சாட்சியாகவும் சபையாருக்கு புத்துயிர் அளிப்பதாகவும் அமைவதாக.

- Daniel Abraham

Rev. V. Gandhi Selwyn
Chairman, EAST CHURCH COUNCIL

பிரசன்னம் தாரும்

பிரசன்னத் திருநாள் அன்று இவ்வாலயம் மங்கல் படைப்பு செய்யப்பட்டதால் பிரசன்ன ஆலயம் என்று பெயர் வழங்கலாயிற்று. இவ்வாலயத்தின் 25 ஆண்டு நிறைவு விழாவை வெள்ளி விழாவாகக் கொண்டாட சபையார் உற்சாகத்தோடு எடுத்த பெரு முயற்சியைப் பாராட்டுகிறேன். இப்பெரிதான அழகான இவ்வாலயம் காலஞ் சென்ற டேவிட் உபதேசியாருடைய தன்னலமற்ற தியாகத்தின் சின்னமாக விளங்குகிறது என்றால் அது மிகையாக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதிலும் சபைகளை உருவாக்கி அவர்களுக்கென்று ஆலயங்கள் கட்டுவதும் ஆண்டவர் அவருக்கு கொடுத்த தனித்திறனாகும். இவ்வாலயத்தின் அண்டையிலே அப்பரிசுத்தவானின் உடல் உயிர்தெழுதலின் நம்பிக்கையோடு அடக்கம் பண்ணப்பட்டிருப்பது அச்சபையாரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

கீழ்தேச மக்கள் பிரசன்னத் திருநாளைத்தான் கிறிஸ்துமஸ் தினமாக ஆசரித்து வந்தார்கள்... இந்தப் பிரசன்ன ஆலயத்தில் ஆண்டவரை ஆராதிக்கும் அனைத்து மக்களும் இந்நாள் வித்தைப் பெற வாழ்த்துகிறேன் தேவ கிருபை உங்களோடு இருப்பதாக.

Rev. P Frederick Sathia Samuel
Asst. Presbyter, NAZARETH

பிரசன்னத் திருச்சபை:- என் அருமை பிரசன்ன மணிநகர் திருச்சபையே! புறஜாதியாருக்கு ஆண்டவர் வெளிப்பட்டதை உன் அடையாளப் பெயராக கொண்டாய்! 25 ஆண்டு கால வளர்ச்சியை கூர்ந்து நோக்குமிடத்து பெயர் பொருத்தமாக அமைந்துபட்டது.

பிரகாச திருச்சபை:- எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது! பிரகாசம் அடைந்தவர்கள், நோக்கிப் பார்த்தவர்களே! நின் திருச்சபை உன் வாழ்விலும் (Spiritual) வெளி வாழ்விலும் (Evangelical) வளர்ந்து பெருகுவது மெத்த மகிழ்ச்சியளிக்கிறது.

பிரயாச திருச்சபை:- திருச்சபைக்கு முதுகெலும்பு அன்பும் ஐக்கியமே! தேவ அன்பு நம்மை நிரப்பும் போது கரங்கள் இணைகின்றன! தோள்கள் பாரத்தை சுமக்கின்றன!

- Rev. பிரெட்ரிக் சத்திய சாமுவேல்

சேகர் ஹென்றி

மணிநகர் கோபுரம்

மணிநகர் சபை மூப்பர்களுக்கும் சபை மக்களுக்கும் கடவுள் மேல் உள்ள வாஞ்சை மிகவும் பாராட்டத்தக்கது பழைய ஏற்பாட்டின் காலத்தில் கடவுளை விட்டு விலகி சென்ற மக்கள் 'ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்குப் பேர் உண்டாக்கப் பண்ணுவோம் வாருங்கள் ஆதி 11:4 என்று 'பாபேல் கோபுரத்தை' கட்ட ஆரம்பித்தார்கள் மக்களின் மனதை அறிந்த கடவுள் அந்த கோபுரத்தை பார்க்கவும் அதை கட்ட விடாமல் தடை செய்யவும் கர்த்தர் இறங்கினார் என்று ஆதி 11:5ல் படிக்கிறோம். ஆனால் மணிநகர் சபை மக்களோ கடவுளின் நாமம் மட்டுமே மகிமை பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடவுளை நம்பினவர்களாக தங்கள் நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி கோபுரத்தை கட்டி முடித்து விட்டார்கள் ஆகவே அன்று பாபேல் கோபுரத்தை பார்க்கிறதற்கு இறங்கின தேவன் இன்று மணிநகர் கோபுரத்தை ஆசீர்வதிக்க வருகிறார் என்று நாம் யாவரும் நிச்சயமாக நம்ப முடியும். கடவுளின் ஆசீர்வாதம் இச்சபைக்கு இருப்பதால்தான் இச்சபையின் முயற்சிகள் வீண் போகாமல் கோபுரத்தைக் கட்டி வெள்ளி விழா கொண்டாடும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

'கர்த்தர் வீட்டை கட்டாராகில் அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா' சங் 127:1

தேவனை தேடும் மக்களுக்கு கடவுள் கொடுக்கும் வாக்குத்தத்தம் 'பயப்படாதே சிறு மந்தையே உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்' லூக்கா 12:32

ஆகவே மணிநகரையும் மணிநகர் சபையார் யாவரையும் கடவுள் அதிகமாக ஆசீர்வதித்து மணிநகர் திருச்சபை கடவுளுக்கு உகந்த சபையாக கோபுரம் போல் உயர்ந்து வைர விழாவையும் கொண்டாட நான் ஜெபிக்கிறேன்.

D. AUGUSTINE JEBAKUMAR
Director of Mission, GEMS

மணிநகர் விசுவாசிகள்

கிறிஸ்துவுக்குள் அன்பான சபையின் மக்களே,

தங்களின் சபை வெள்ளி விழா கொண்டாடுவதை அறிந்து மட்டில்லா பேரானந்தம் அடைகிறேன். உங்கள் சபையின் பெயருக்கேற்றார் போல் கிறிஸ்து புறஜாதியாருக்கு வெளிப்பட்ட பிரசன்ன நாளை பிரதிஷ்டையின் நாளாகக் கொண்டு அதை செயல்படுத்திக் கொண்டு வரும் தங்களுக்கு தேவ கிருபை இன்னமும் பெருக வாழ்த்துகிறேன். GEMSன் மூலமாக சகோதரி ரெஜினாவைத் தாங்கி பீஹாரில் புறஜாதியினர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிய அனுதினமும் ஜெபிக்கும் உங்களின் செய்கை பெயருக்கேற்றார் போல் வாழும் உங்கள் வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிற நீங்கள் (பிலி 2:14) இன்னமும் ஒளி தர பரிசுத்த ஆவியானவர் உங்களில் எண்ணெய் ஊற்றுவாராக.

A. PETER ISAAC RAJ, B.A.,B.Ed.,B.D
Promotional Secretary, GEMS

வெள்ளி விழா கொண்டாடும் நாசரேத் சேகரம் - மணிநகர் பிரசன்ன ஆலய சபையார் யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துதலையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன் 1982ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை பிரசன்ன ஆலயத்தின் சபை ஊழியனாக பணியாற்றிய எனக்கு மணிநகர் சபையின் வளர்ச்சி என் கண் முன் தோன்றுகிறது. வெள்ளி விழா கொண்டாட்டம் உண்மையிலேயே கர்த்தருடைய நாமத்துக்கு மகிமைக்குரியது என்று நான் திட்டவட்டமாகக் கூறுவேன். ஏனென்றால் ஆதி அப்போஸ்தல சபை எவ்விதமாக உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து செயல்பட்டதோ அவ்விதமாக மணிநகர் சபையும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்ற கர்த்தருடைய பிள்ளைகளைக் கொண்ட சபையாகும்.

ஆதி அப்போஸ்தல சபை போன்று, ஜெபத்திலும் வேத வாசிப்பிலும், சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஆவியில் மகிழ்ந்து கர்த்தரை இன்றும் ஆராதிக்கிற சபையாகும்... எல்லாவற்றிற்கும் மேலாக சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கப்பட வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து பீஹார் மாநிலத்தின் வட பகுதியில் ஒருபோதும் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடத்தில் சகோதரி ரெஜினா என்னும் மிஷனெரி சகோதரியை சுவிசேஷ பிரதிவொலி மிஷனெரி சங்கம் மூலமாகத் தாங்கி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தியும் வருகிறார்கள்.

ஆலய வரலாறு மற்றும் சாட்சிகள்

மணிநகர் சபைக்கு என் பணி

- பொ. துரைராஜ்

கி.பி 1800ம் ஆண்டில் நாசரேத் சபை தோன்றினும் நீண்ட இடைவெளிக்குப் பின் அதன் கிளைச் சபைகளான வகுத்தான்குப்பம் சபை 1873லும், திரவியபுரம் சபை 1953லும் மணிநகர் சபை 1968லும், திருமறையூர் சபை 1971லும் மாணிக்கவாசபுரம் சபை 1991லும் தான் உதயமானது.

1967ல் ஒரே கிறிஸ்தவ குடும்பம் வசித்து வந்த இவ்வூரில் கிறிஸ்தவ நற்பணி செய்த திரு. அன்பு கம்பவுண்டர் அவர்களும் 1968ல் இச்சபையை நிறுவிய நிறுவனர் தாத்தா டேவிட் வைத்தியர் அவர்களில் இருந்து இன்றுவரை எல்லா காரியங்களிலும் எனது ஈடுபாட்டை மணிநகர் சபைமக்கள் விரும்பியதே ஆகும். திரு. G அன்பு கம்பவுண்டர் சகோதரர் என்னுடன் ஆலையில் பணியாற்றிய திரு. G டேவிட் அவர்கள் பனிக்குல மாணிக்கம் வைத்தியர் தாத்தாவை எனக்கு அறிமுகப்படுத்தினர்.

புறமதஸ்தருக்கு மத்தியில் பல சோதனைகளிலும், போராட்டங்களுக்கும் இடையில் தீய சக்திகளால் எரிந்து போன கூரை ஆலயத்தை புதிய பொலிவில் குறைந்த்து 80 அடி உயரமான கோபுரத்து உள்ளே 500 பேர்கள் தியானிக்கும் ஆலயம் கட்ட திட்டம் வகுத்து 1968ல் நாசரேத் பாஸ்ட்ரேட் சேர்மன் மறைதிரு. ஜெபமணி ஐயர் அவர்களின் திருக்கரத்தால் அஸ்திபாரம் போடப்பட்டு... 1974 ஜனவரி 6ம்நாள் பேராயர் அருட்பெருந் திரு. டேனியல் ஆபிரகாம் அவர்களால் இந்த பிரசன்ன ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நேற்று இன்று நாளை

- ச. ஞானானந்தம்

நேற்று:- 1968ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சபையில் மொத்தம் ஆறு குடும்பங்கள் தான் அது பலுகி பெருகி இன்று எண்பது குடும்பங்களில் உள்ளவர்கள் ஆராதனை செய்து வழிபடும் ஆலயமாக அமைந்துள்ளது.

இன்று:- இவ்வாலயத்தின் சிறப்பு இவ்வாலயம் மிகவும் புனிதமானது. எவ்வித தவறுகளும் இப்பகுதியில் நடைபெறாது. மற்ற ஆலயங்களுக்கு செல்பவர்கள் கூட அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள், துன்பங்கள், துயரங்கள் வந்தால் இவ்வாலயத்தில் முன்பகுதியில் வந்து முழங்காலில் நின்று அழுது புலம்பி ஜெபிப்பவர்கள் உண்டு ஆசீர்வாதங்களை உடனுக்குடன் பெற்றுச் செல்பவர்கள் பலர். வெள்ளிவிழா காணும் எங்கள் சபைக்கு வெள்ளிவிழா சட்ட வாக்கியமாக எங்கள் தலைமை குருவால் கொடுக்கப்பட்ட வசனம்: "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" சங் 138:8.

நாளை:- பெரிய நகரமாக வளரும் நிலையிருப்பின் மணிநகர் ஆலயம் வருங்காலத்தில் விஸ்தரிக்க வேண்டிய நிலையில் இருக்கும்... நாசரேத் சேகரமானது இன்னுமசில காலங்களில் நாசரேத் திருமண்டலமாக உருவாகும் வாய்ப்புள்ளது, அப்போது இம்மணிநகர் சபையானது ஓர் சேகரமாக மாற வேண்டும்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

- ஆ கமலம் அம்மாள்

1965-ம் வருஷம் நாசரேத்திலிருந்து மணிநகரில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினோம் எனக்கு இளுப்பு வியாதியினால் கஷ்டப் பட்டு ஜான் பிரசங்கியார் கூட்டத்திற்கு போய் நான் பாவத்தி லிருந்து விடுதலை பெற்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டேன் நானும் என் பிள்ளைகள் இரண்டு பேரும் நாசரேத் ஆலயத்திற்கு போவோம் எனக்கு ஒரு ஆத்தும பாரம் இந்த ஊரில் ஒரு ஆலயம் வேண்டும். இந்த மணிநகர் மக்கள் உம்மை அறிய வேண்டும் என்று ஒரு நாளைக்கு மூன்று தடவை 2 மணி நேரமாவது ஜெபிப்பேன்.

...பெண்கள் கூடி வெள்ளிக் கிழமையும் புதன் கிழமையும் ஆலயத்தில் 2 மணியிலிருந்து 4 மணி வரை ஜெபிப்போம் எங்களுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று என் கணவர் ஆபிரகாம் அவர்கள் பக்கத்து வீட்டு பால்பாண்டி அவர்களும் சேர்ந்து 25 செண்டு நிலம் வாங்கினார்கள் எங்கள் ஜெபத்தின் பலனாக ஒரு ஓலை கோயில் அந்த நிலத்தில் கட்டினோம் அந்த ஆலயம் தீப் பிடித்து எரிந்து விட்டது மேலும் எங்கள் ஜெபத்தினால் இதுவரை வரி என்று போடாமல் இவ்வளவு பெரிய ஆலயம் கட்டி ஆராதனையை ஆசீர்வாதமாக நடத்தினார் தேவன்...

நம் தேவன் பெரியவர்

- K. A ஆபிரகாம் [ராதா]

சுமார் 7-8 வருஷங்கள் முன்பு வரை கிறிஸ்தவனாக இருந்து தேவனை அறியா முரடனாக வாழ்ந்து சபையையும் கிறிஸ்துவையும் தேடாத வண்ணம் வாழ்ந்த எங்கள் குடும்பம் முக்குப்பீறி ஊரில் வாடகை வீட்டில் இருந்த நேரம் தேவன் நம் இயேசு என்னை சந்தித்தார் உன்னதமானவரின் மறைவினில் இருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான் என்ற வசனம் போல் எனக்கு மணிநகர் சபையில் உள்ள ஆபிரகாம் நாடார் என்பவரின் மனைவி கமலம் அம்மாள் மூலம் கிரியை செய்தார்... இன்று நாங்கள் பிரசன்ன ஆலய ஜெபம் ஒழுங்கு இதற்கு கட்டுப்பட்டு தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு இந்த குடும்பம் ஓர் நல்ல குடும்பமாக ஒற்றுமையாக இருக்கிறோம்.

நினைத்துப் பார்க்கிறேன்

- V. ஜோசப் அருள்ராஜ்

பூர்வ நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய் சென்ற வருஷங்களைக் கவனித்துப் பார் உபா 32:7... அதனையடுத்து "மணிநகரில் தந்தையாம் வைத்தியர் திரு. டேவிட் அவர்களின் அரும்பாடும் அயராத உழைப்பும் காரணமாக திரு. தானியேல் அவர்கள் துணையுடன் இறைவன் இயேசுவைத் தேட ஓர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது... 1974-ம் ஆண்டில் அளவில்லா ஆசீர்வாதங்களைப் பொழிந்த இறைவன் வெள்ளிவிழா காணும் இந்த ஆலயத்தைக் கட்ட அருள் புரிந்தார் திரு. ஜெபமணி ஆசிரியர் திரு தாவீது போன்றவர்களின் உண்மை உழைப்பில் பணிகள் உயர்ந்தன.

இன்று தம்பி ரவி மூலமாக கனி கொடுக்கின்றன எப்படியென்றால்......... மிஷனரிகளை அனுப்பும் சபையாக சுவிசேஷ ஊழியத்தில் சுறுசுறுப்புள்ள சபையாக மிஷனரிப் பணிகளுக்கு சவால் விடும் சபையாக ரெஜினா என்பவரை மிஷனரியாக அனுப்பியும் ஆலங்குளம் காலங்கரப்பட்டி ஆகிய இடங்களில் தொடர்ந்து சுவிசேஷப் பணி செய்தும்... இறைவனை மகிமைப்படுத்தும் சபையாக விளங்கி இன்று பொலிவுடன், வெள்ளிவிழா காணும் மணிநகர் சபையே உன் பணி தொடரட்டும்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

- A.M.J. RAVI (கன்வீனர் and பொருளாளர்)

1966ம் ஆண்டு தேரிபகுதியில் குடியேறிய சில குடும்பங்களின் வாஞ்சையை அறிந்த கர்த்தர் தம்முடைய ஊழியக்காரராகிய தாத்தா வைத்தியர் டேவிட் உபதேசியாரைக் கொண்டு 1968ம் ஆண்டு இப்போது இருக்கிற ஆலயத்தின் அருகில் சிறிய ஓலை வேயப்பட்ட ஆலயம் கட்ட கிருபை செய்தார். முதலில் 6 குடும்பங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த நாட்களில் உதவிய அன்பு சுப்பவுண்டர் அவர்களை நினைக்கி்றேன். மேலும் ஆவிக்குரிய காரியங்களிலும் ஆண்டவருடைய ஆலோசனையையும் கூறி உதவி செய்த தானியேல் (பாட்டக்கரையார் ஓட்டல்) அவர்களையும் நினைக்கிறேன்.

1988ம் ஆண்டு ஆலய கோட்டை கட்ட கர்த்தர் ஏவினார் நாங்கள் யாவரும் ஜெபித்து இந்த காரியங்களை செய்து முடித்தோம்... திரு. தங்கையா ஆசிரியர் அவர்கள் சபை ஊழியத்தை ஏற்று எங்களில் ஒருவராக இருந்து எங்களை வழி நடத்தியும் எங்கள் ஆலயத்துக்கு ஆல்டர் ஓடுகள் மாற்றி கான்கிரீட் போட்ட விஷயத்திலும் கோபுரம் முதல் தட்டு கட்டும் விஷயத்திலும் பொருள் வைப்பு அறை கட்டும் விஷயத்திலும் எங்களுக்கு உதவி செய்ததை மறக்கவே முடியாது அதற்கும் பின் 1992ம் ஆண்டு கடைசியில் திரு P. அடைக்கலம் தர்மராஜ் அவர்கள் சபை பணி ஏற்று இம்மட்டும் நடத்தி வருகிறார்கள்...

நாசரேத் சேகரம் மணிநகர் சபை

- P. அடைக்கலம் தர்மராஜ் (உபதேசியார், மணிநகர்)

திருநெல்வேலி திருமண்டலத்திலுள்ள 1145 கிறிஸ்தவ கிராமங்களுள் மணிநகர் சபையும் ஒன்றாகும். இது நாசரேத்தின் கீழ் பகுதியில் தேரிப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் திரு. டேவிட் பிரசங்கியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது அவர் கல்லறை ஆலய வளாகத்துக்குள் இருப்பது மிக பெரிய சாட்சியாகும் அவர் மரித்தும் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்.

மணிநகர் சபையில் வளர்ந்து பெருகுக என்ற 200 ஆண்டு வல்ல வாக்கின் படி கடந்த ஆண்டு 10 பேருக்கு பருவம் கடந்த ஞானஸ்நானம் கொடுத்து தற்போது 84 குடும்பங்கள் இருக்கின்றன. மணிநகர் சபையில் ஒரு சுவிசேஷ ஊழிய குழு உண்டு மாதத்தின் 4வது ஞாயிறு சென்று ஊழியம் செய்வது ஒரு நல்ல அம்சமாகும் மேலும் வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் ஒரு ஊழியரை ஆதரிப்பதுடன் வெள்ளி விழா நினைவாக அங்கு ஒரு ஆலயம் கட்டுவது பாராட்டத்தக்கது.

சபையின் சிறப்பம்சங்கள்

மணிநகர் ஆலயத்தின் மறைந்து கிடக்கும் மாபெரும் பொக்கிஷங்கள்

- Reginaravi

மணிநகர் பெண்கள் ஐக்கிய சங்க ஊழிய வளர்ச்சி

- திருமதி. ரெஜினா ரவி

மணிநகர் ஆலயம் ஸ்தாபித்த நாட்களிலே இரண்டு, மூன்று குடும்பங்களே உள்ள நிலையில் அவர்கள் பெண்களாக கூடி ஜெபித்தார்கள் அதின் மூலமாக கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார். அநேகர் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றார்கள் சபை வளர்ச்சியடையலாயிற்று இன்று 80-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம் நடைபெறும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஆலயத்திலே ஜெபம் ஏறெடுக்கப்படும். புதன்கிழமைகளிலே இல்லங்களிலே ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மாதத்தின் முதல் திங்கள் கிழமை அத்தியட்சாதீன பெண்கள் உபவாச நாள் மாலை 1 மணி முதல் ஆலயத்திலே நடைபெறுவதுண்டு நான்காவது வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆத்தும ஆதாயப் பணியிலும் பெண்கள் பலர் வெளியிடங்களுக்கு சென்று ஊழியர், வானரமுட்டி சுவிசேஷ பணி இவற்றிலும் பங்கு பெறுகின்றனர்.

கிறிஸ்தவ வாலிப பெண்கள் சங்கம் Y.W.C.A

- திருமதி. ரெஜினா ரவி

பணிநகர் வாலிப பெண்கள் சங்கம் கர்த்தரின் கிருபையால் வளர்ந்து பெருகி வருவது மிக மகிழ்ச்சிக்குரிய காரியமாகும், வாரந்தோறும் வாலிபப் பெண்கள் ஐக்கிய சங்கம் மிக ஒழுங்காக ஆலயத்தில் நடைபெறும் வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்ட பாடல்கள், அனுபவ சாட்சிகள், வேதாகமத்தின் பகுதிகள் கற்பிக்கப்படுகிறது... வருங்காலத் திருச்சபையின் தூண்களாகத் திகழப் போவது இப் பெண்களே.

மணிநகர் ஓய்வுநாள் பாடசாலை

- திருமதி. ரெஜினா ரவி

மணிநகரில் ஓய்வுநாள் பாடசாலை ஆலயம் கட்டுமுன்னரே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நாட்களில் திரு. மார்ட்டின் அண்ணன் அவர்கள் ஓய்வு நாள் பாடசாலை வகுப்பை நடத்தினார்கள். அதன் பயனாக இன்று ஊழியம் செய்யும் அளவிற்கு வாலிபர்கள் எழும்பி உள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. அவர்களுக்கு பின் ஓய்வுநாள் பாடசாலை சபையின் வாலிபர்களால் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தம்பி சாமுவேல் பொறுப்பெடுத்து அதனை நடத்திச் சென்றான் தற்போது வாலிப பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பாக எலிசபெத், ஜெனட், எப்சி, எஸ்தர் ஆகியோர் இந்த வகுப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளை அங்கி (பாடகர் குழு)

இயேசு கிறிஸ்துவின் பெரிதான கிருபையினால் (1993) இவ்வெள்ளி விழாவாண்டில் ஏப்ரல் 11ந் தேதி கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பண்டிகை ஆராதனையில் அதிகாலை 1:30 மணி அளவில் நமது சேகர குரு திரு. ஜாண்செல்லையா அவர்களால் ஆண்டவரின் நாம மகிமைக்காக பாடகர்குழு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடர்ந்து நமது சபையின் திரு. சந்திரன் ஞானானந்தம் அவர்கள் ஆர்க்கனிஸ்டாக பணியாற்றி வருகிறார்கள். பாடகர் குழுவின் ஆதிக தேவைகளின் மத்தியிலும் கர்த்தர் நடத்தி வருகிறார்.

கவிதைகள்

குதூகலம் கொண்டாட்டமே
மணிநகரில் பிரசன்ன ஆலயம் குதூகலம் கொண்டாட்டமே இயேசுவின் சந்நிதானத்தில் சின்னஞ் சிறார்கள் குதூகலம் கொண்டாட்டமே இறைவனை ஆவியோடும் கருத்தோடும் துதிக்கும் வாலிபர்க்கு குதூகலம் கொண்டாட்டமே ஆலயத்திற்கு மிக்கேலின் மின் இசை கருவி கர்த்தர் ஈந்தார் குதூகலம் கொண்டாட்டமே வெள்ளி விழாவாம் திருநாளில் மெல்லிய அங்கி தரித்து கர்த்தரை துதிப்போமே குதூகலம் கொண்டாட்டமே
- G. சந்திரன் ஆர்கனிஸ்ட்
பிரசன்ன ஆலயம்
சின்ன சின்ன ஆலயம் சிங்கார ஆலயம் பிரதான ஆலயம் பிரசன்ன ஆலயம் மணிநகரில் ஆலயம் மணி போன்ற ஆலயம் அன்பான ஆலயம் அருள் மிகுந்த ஆலயம் சொற்பமான ஆலயம் சொக்க வைக்கும் ஆலயம் ஆனந்தமாம் ஆலயம் ஆண்டவர் தந்த ஆலயம் புத்தம் புது ஆலயம் புனிதமான ஆலயம் வாழ்க! வாழ்க! ஆலயம் பிரசன்ன ஆலயம்
- J. Ganaraj Paul Durai
இதயத்தில் ஓர் ஆலயம்
மணிநகரில் ஆனந்தம் ஆனந்தம் ஆயிரம் மக்களின் உற்சாகம் அன்பும் அருளும் பொங்கும் ஆண்டுகள் கடந்தன இருபத்தைந்தும் பரிசுத்த பிரசன்ன ஆலயம் பார்க்கப் பார்க்க ஆனந்தம் பலரும் வணங்கி மகிழ்கின்றன பாலகன் இயேசுவின் இருதயம் ஆனந்த கோடி வணக்கம்... என்றும் நிலைக்கும் நல்லாட்சி பொன்விழா கொண்டாட வாழ்த்துங்கள் வாழ்க ! வாழழ்க ! என்றும் ஜோலித்திடும் ஆலயம் வாழ்க !
- M Jebaseeli Ebenezar
ஆலயம்
வெள்ளி விழா காணும் பணிநகர் பிரசன்ன ஆலயமே வீரநடை போட்டு எம்மை மகிழ்விக்க வந்தாயோ? அமைதியாய் நின்று நீ ஆரவாரிக்கும் மக்களை இறைவனிடம் கொண்டு வர ஈந்திடுவாய் இடம் தன்னிலே உலகின் ஒளி இயேசுவை ஊக்கமாய் பற்றிக் கொள்ள எம்மைப் போன்ற சிறியோரை ஏற்றுக் கொள்வாய் உன்னிடம் ஐயா என்று அவர் பாதம் பணிய ஒருமனப்பட்ட உள்ளங்களை ஓயாது தந்திடுவாய் என்றும் ஔஷதமாம் நல் ஆலயமே.
- திருமதி. ரெஜினா ரவி
மணி ஓசை
ஆலய மணியின் சத்தம் அழைக்கிறது நம்மை நித்தம் நமது மனதின் பாரம் நீக்கிடுவது இறைவனின் திருச்சித்தம் ஞானஸ்நானம் எடுத்து முன்பு கிறிஸ்து சபையில் சேர்ந்த பின்பு வளருவாய் நாளும் நாட்டங் கொண்டு வேதத்தில் ஜீவ வசனம் உண்டு சிலுவை சுமந்தவரைப் பாரு சிந்தையை ஒன்றாக சேரு பரமனோடு வாழும் போது பாவம் என்பது ஏது!
- Reginaravi
கவிதை கொத்து! பிரசன்ன ஆலயம் காணும் வெள்ளி விழா
இங்கே ஓர் அழகிய சிற்றாலயம் இனிய பெயர் பிரசன்ன ஆலயம் அகத்தினை ஆலயமாக்கி உள்ளத்தினால் பக்தி வைத்து பிரசன்ன ஆலயத்தின் மகிமையை எம் நெஞ்சங்கள் மறப்பதில்லை அன்பு பிரவாகமே! அன்பால் அரவணைக்கும் பிரசன்ன ஆலயமே நின் அருளும் கருணைக்கு எல்லையுண்டோ உம் அருள் கிட்டி இருள் திரைவிலக்கி அருள் கடல் சேர்ந்து அன்புள்ளம் உய்த்து என் உள்ளம் சிறக்க எம் ஆலயம் வெள்ளி விழா காண்கிறது
- G. Janet B.Sc., B.Ed.,
இறை வாழ்த்து
ஆறு நாளில் அகில உலகினை அழகாய்ப் படைத்த அன்பின் இறைவா! ஆதி மனிதன் நீதிக் கட்டளை மீறிப் பாவம் செய்த தாலே அழியா வாழ்வை இழந்தார் மாந்தர். அழியும் பாவ சாபம் பெற்றார் மனிதர் மீது மாறா அன்பால் மனித உருவில் வந்த தேவா! ... எங்கள் ஆலயம் எல்லா நிலையிலும் ஏற்றம் பெற்றிட ஊற்றுமும் ஆசி தொழுபவர் உள்ளம் கனிந்திடச் செய்கெனக் கரமலர் குவித்த்துன் பாத மலர் பணிவேனே
- பா. மோசஸ் ஜெபமணி

சிந்தனைகள் மற்றும் உரையாடல்கள்

****************************
"கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது"
****************************

துதிப்போம் துதிப்போம் துதிப்போம்
பிரசன்ன ஆலயமாம் துதிப்போம்
அவர் கிருபையின் ஆலயம் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா என்றே துதிப்போம்

- வசந்தா செல்வராஜ்

கர்த்தருடைய அற்புத செய்கையை வந்துபாருங்கள்

ராஜேஷ்:- வணக்கம். தம்பி,

குமார் :- வணக்கம். நீங்க..........

ராஜேஷ்:- சொல்றேன் என் பேரு ராஜேஷ். நான் இங்க வந்து இப்போ மூணு நாளு ஆகுது

குமார் :- அப்படியா, நின்னுக்கிட்டே இருக்கீங்களே இப்படி இந்த மண்ல இருந்து பேசுவோமே.......

ராஜேஷ்:- சரி, நீங்க இப்போ உங்க ஆலயத்தின் இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுறீங்களாம். உங்க ஆலயத்தின் பேரு என்ன?

குமார் :- பிரசன்ன ஆலயம்

ராஜேஷ்:- ஊரு பேரு மணிநகர் தானே?

குமார் :- ஆமா

ராஜேஷ்:- இந்த ஆலயத்தை கட்டினது யாரு?

குமார் :- அவுங்க பேரு வைத்தியர் டேவிட் பிரசங்கியார்;

ராஜேஷ்:- கொஞ்சம் இருங்க வைத்தியருன்னு சொன்னீங்களே அப்படின்னா..........

குமார் :- ஹோமியோபதி வைத்தியர், கை கால் ஒடிஞ்சா கட்டுவாங்க ஆனா யாருகிட்டேயும் காசு வாங்க மாட்டாங்க எல்லாருக்கும் இலவசம் தான்

ராஜேஷ்:- காசு வாங்க மாட்டாங்கன்னு சொன்னீங்க அப்போ குடும்பத்துக்கு ...........

குமார் :- குடும்பமா கல்யாணம் ஆகல, பிரமச்சாரி தன்னுடைய கடைசி மூச்சு வரை ஆண்டவருக்காகவே ஊழியம் செய்தவங்க.

ராஜேஷ்:- அப்படின்னா ஒரு பெரிய பரிசுத்தவானால இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதுன்னு சொல்லுங்க

குமார் :- உண்மையகவே அப்படித்தான், அவுங்கள ஆண்டவர் இப்படிப்பட்ட காரியத்துக்காகவே தெரிந்து எடுத்திருக்காரு மொத்தம் ஏழு ஆலயம் கட்டியிருக்காங்க இதுதான் கடைசி ஏழாவது ஆலயம்

...

ராஜேஷ்:- பிரசன்ன ஆலயம்ன்னு பேரு சொன்னீங்க. இப்போ ஆண்டவர் உண்மையிலே இந்த ஆலயத்துல பிரசன்னமா இருக்காரா?...

குமார் :- உண்மையாகவே ஆண்டவருடைய பிரசன்னம் இங்க அபரிதமா இருக்கு எப்படி ஆதியில் மோசே ஆண்டவருக்கு ஆசரிப்பு கூடாரம் போடும் போது கர்த்தருடைய பிரசன்னம் மேகமூட்டமா எப்போழுதும் இறங்கி இருந்ததோ அதே பிரசன்னம் இந்த ஆலயத்துல இப்பவும் உண்டு...

...

ராஜேஷ்:- இந்த அளவுக்கு கர்த்தர் மேல் விசுவாசமாக இருக்கிற உங்களை எண்ணி மிகவும் சந்தோஷம் அடைகிறேன்...

குமார் :- ஏன்னா இது பரிசுத்தரை ஒன்றாக கூடி துதிக்கிற இடம் எனவே சேனைகளின் கர்த்தரின் வாசஸ்தலம் அதனால் அந்த மகிமை தானாகவே இந்த ஆலயத்துக்கு கிடைச்சிருக்கு...

- P. கிறிஸ்தோபர் பிரசன்னதாசன் M.Com

சிந்தித்துப் பார் !

- Mr A.M J R

winter season விரைந்து ஓடிக் கொண்டிருந்தது நேரம் சுமார் 6 am மணி இருக்கும் காலைக் கதிரவன் தன் தோழியாம் சிவப்பு நிறத்துடன் தோன்றி செந்நிறத்தில் வானில் மிதந்து கொண்டிருந்தது... அங்கே 10 வயது நிரம்பிய அக்கா Shanthi தங்கை Gloria-வை அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள். 'ம் ம் சீக்கிரம் புறப்படு அப்பா கூட சுவிஷேச ஊழியத்துக்கு நாமும் போகணும்லா.......' அதற்குள் அவளுக்கு அடுத்த தங்கை Jachollian (5) விடவில்லை எனக்கும் இயேசப்பா பாட்டு பாடத் தெரியும், நானும் வர்ரேன் -க்கா...... கொஞ்சம் குரலில் அவள் கெஞ்சினாள் அனைவரும் ஆயத்தமாயினர், ஊர் வந்தது ஒருவரையுங் காணோம் சிறுமிகள் தங்கள் செல்லக் குரலில் பாட ஆரம்பித்தனர் மண்ணிலே விண்ணின் கீதம் கேட்டதும் கூடினது கூட்டம். இனி ஆத்துமாக்களை அறுவடை செய்வது ஆண்டவன் பணியன்றோ.

சாயங்காலம் 4:30 மணி இருக்கும் அன்று சனிக்கிழமை சிறுமிகளின் வாய் விவிலியத்தின் வரிகளை விளித்துக் கொண்டிருந்தது. விவரம் அறிய அவர்கள் அருகில் அமர்ந்தேன் அப்போது தான் புரிந்தது Sunday Class விவரம் அவர்கள் தங்கள் தம்பியையும் மனனம் செய்யத் தூண்டிக் கொண்டிருந்தனர் சிறுவன் தனது குறும்புச் குரலில் கூறினான் 'ஜீவ அப்பம் நானே' அவன் தன்னைத் தானே காட்டினான்...... அப்போது அதின் அர்த்தத்தை என்னால் உணர முடிந்தது தீவிரமாய் சிந்திக்கலானேன் இன்று நான் பிறருக்கு அப்பமாக விளங்குகிறேனா...... பிறரை போஷிக்கிறேனா....... என்னுள் எழுந்த இதய ஏக்கத்துக்கு பதிலளிக்க என்னையே எழுப்பிக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் நிலை எப்படி? சிந்தித்துப் பார்த்து சிலுவை அப்பத்தை நோக்க முடிகிறதா............?

மறக்க முடியுமா?

- Martin Jebamani Esther / பா. மோசஸ் ஜெபமணி

1. இருட்டு
2. இருட்டின் மடியில் நின்று கொண்டு
3. பரந்த வானத்தை வெளித்து நோக்குகிறேன்...
14 முதலில் அவரை அணுக அச்சப்பட்டது உண்மைதான் அப்புறம் தானே தெரிந்தது அவர் அத்தனை அன்பானவர் என்று!
15 சகோதரத்துவத்தைப் புரிய வைத்தார். ஒழுக்கம் கடை பிடிக்க கற்றுக் கொடுத்தார், ஒன்றும் தெரியாமல் இருந்த என்னை தெரிந்தவனாக்கினார்...
17 இனிமையுடன் இன்பமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த வாழ்க்கையில் விழுந்தது இடி! அந்த இடிதான் 1983ம் ஆண்டு 16ம் தேதி விழுந்தது இடி.
18 பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயம், காலத்தின் கோலம்
19 அழுதேன் - துடித்தேன்; கதறினேன்; கண்ணீர் இறைத்தேன்...
22 அதாவது திரு. டேவிட் பிரசங்கியார் என்னும் எங்கள் தாத்தாவிடம் அல்லவா கொடுத்து விட்டேன்
23 அவர் இருந்த அந்த நாட்களைத் தான்
24 மறக்க முடியுமா? அந்த காலம் தான் திரும்ப வருமா?

"இயேசுவின் பிறப்பினால்"

- Martin Jebamani Esther

ஆனால் உங்களுக்கு என்ன? நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்?